search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் ஊழியரை தாக்கி கொள்ளை"

    ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5½ லட்சம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவர் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த கடையில் தாழக்குடியை சேர்ந்த புஷ்பராஜ், பழவூரை சேர்ந்த முனியாண்டி ஆகியோர் ஊழியர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்த டாஸ்மாக் கடையில் ஒவ்வொரு நாளும் வசூலாகும் பணத்தை இவர்கள் எண்ணி கணக்கு பார்த்துவிட்டு அதை பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.

    நேற்று இரவு 10 மணிக்கு மதுபான விற்பனை முடிந்ததும் வசூல் தொகையை எண்ணி கணக்குப் பார்த்து உள்ளனர். அப்போது ரூ.5 லட்சத்து 33 ஆயிரத்து 880 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

    அந்த பணத்தை கண்காணிப்பாளர் முருகன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு ஆரல் வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தார். கடை ஊழியர்களில் ஒருவரான முனியாண்டி பழவூர் நோக்கி சென்றுவிட்டார். மற்றொரு ஊழியரான புஷ்பராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்று கொண்டிருந்தார்.

    குமாரபுரம் பெட்ரோல் பங்க்கை தாண்டி இருளான பகுதியில் முருகனின் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் முருகன் அருகே வந்ததும் தங்கள் மோட்டார் சைக்கிளால் அவரை வழிமறித்து தடுத்து நிறுத்தினார்கள். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒரு வாலிபர் இறங்கிச் சென்று தன் கையில் இருந்த அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டினார்.

    இதனால் அவர் அலறிய படி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். உடனே அந்த வாலிபர் ரூ.5½ லட்சம் பணத்துடன் முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். மற்ற கொள்ளையர்கள் 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் புஷ்பராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். நடுரோட்டில் ரத்த காயத்துடன் முருகன் விழுந்து கிடப்பதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

    பிறகு அவர் ஆரல்வாய் மொழி போலீஸ் நிலையம் சென்று துணிகர கொள்ளை பற்றி புகார் செய்தார். உடனே ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆம்புலன்சை வரவழைத்து முருகனை சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த துணிகர கொள்ளை பற்றி ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகதேவி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் பணத்தை ஊழியர்கள் எடுத்துச் செல்வதை நோட்ட மிட்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட் டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளையர்களை கைது செய்ய ஏ.டி.எஸ்.பி. ஜவகர் தலைமையில் தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொள்ளையர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். கொள்ளையர்கள் டாஸ்மாக் கண்காணிப்பாளர் முரு கனின் மோட்டார் சைக் கிளுடன் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை போலீஸ் சோதனைச்சாவடியில் தெரிவித்து அதன் மூலமும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ×